ஜாக்டோ-ஜியோ போராட்டம்: உரிய விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்!

--

ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

jacto

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட வருகிறது. இது நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மாவட்ட தலைநகரங்களில் திரண்ட அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் வரும் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பணிக்கு திரும்புவதா அல்லது போராட்டத்தை தொடர்வதா என்பது குறித்து இன்று பிறபகல் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சார்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் போராட்டம் தொடர்ந்து நடத்த வேண்டுமென தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்கம் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.