சென்னை: இந்திய கல்வியாளர் மது பூர்ணிமா கிஷ்வார், 2016ம் ஆண்டின் திமுக தேர்தல் அறிக்கையின் சில பக்கங்களை, 2019ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அறிவிப்புகள் என்று தவறுதலாக குறிப்பிட்டு டிவீட் செய்து, சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

“கோயில் நிலங்களில் நீண்டகாலம் குடியிருப்போர்களின் வேண்டுகோளை பரிசீலித்து, அந்த நிலங்களின் உரிமையை அவர்களுக்கே மாற்றித்தருவது குறித்து ஆராய, ஒய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழுவமர்த்தப்படும்”.

“வக்பு வாரிய நிலங்களை ஆக்ரமித்துள்ளோர் வெளியேற்றப்பட்டு, அந்த நிலங்கள் மீட்கப்பட்டு, மீண்டும் வக்பு வாரியத்திடமே ஒப்படைக்கப்படும்”.

மேற்கூறிய 2 கருத்துக்களும் திமுக -வின் 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள். ஆனால், அவை 2019ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுதைப் போலவும், வாக்குறுதிகளில் பாரபட்சம் இருப்பதாயும், மது பூர்ணிமா டிவீட் செய்துள்ளதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் ட்வீட்டுக்கு, பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், அவரின் இந்த தவறான செயலை, திமுக கண்டித்துள்ளது. தேர்தல் அறிக்கையின் விபரங்களை தவறாக குறிப்பிடுவதோடு அல்லாமல், கட்சியின் நிலைப்பாட்டையும் மாற்றி சித்தரிப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி