பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?

சென்னை:

தமிழகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு கோடி முட்டைகளை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் ஒரு முட்டை ரூ.4.35 என நிர்ணயம் செய்து ஒப்பந்தம் பெற்றுள்ளது. தற்போது ஒரு முட்டை ரூ.5.16க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் முந்தைய விலைக்கு முட்டை சப்ளை செய்ய முடியாத நிலை அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் முட்டை சப்ளை திடீரென்று நிறுத்தி விட்டது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளுக்கு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு முட்டை விநியோகம் செய்ய ஏதுவாக வெள்ளிகிழமை அன்றே முட்டைகள் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.

தனியார் நிறுவனம் சப்ளையை திடீரென நிறுத்தியிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வரை முட்டைகள் பள்ளிகளுக்கு வந்து சேர வில்லை. இதனால் நாளை முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவில் முட்டை வழங்குவது கேள்வி குறியாகியுள்ளது. அரசு மாற்று நடவடிக்கை மேற்கொண்டால் தான் மாணவ மாணவிகளுக்கு முட்டை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.