வயது 200: ‘மெட்ராஸ் -ஐ’ நோயை கண்டுபிடித்த ஆசியாவிலேயே பழமையான எழும்பூர் கண் மருத்துவமனை!

சென்னை:

சியாவிலேயே பழமையான மருத்துவமனையான எழும்பூர் அரசு கண் மருத்துவமனை தனது 200வது  ஆண்டு பணியை தொடங்கி உள்ளது. இதை அரசு கொண்டாடி வருகிறது.

உலகின் மிக தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றானதும், உலகின் 2-வது பழமையான மருத்துவ மனையான  சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு 200வது பிறந்து உள்ளது.

1809-ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சனால் தொடங்கப்பட்ட அரசு கண் மருத்துவமனைதான், மிகவும் பழமையானதும், தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்த மருத்துவமனை முதலில் சென்னை ராயப்பேட்டை அருகே உள்ள  ‘பழைய மெட்ராஸ் கிளப்’ அருகே தொடங்கப்ட்ட நிலையில்,  1844-ம் ஆண்டு  சென்னை எழும்பூர் பகுதிக்கு இடம் பெயர்ந் தது. தொடக்கத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்த கண் மருத்துவமனை, சுதந்திரத்திற்கு பின்னர்  மாநில அரசின்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த மருத்துவமனையில் தான் ‘மெட்ராஸ் ஐ’ எனும் கண் நோய் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. அதுபோல முதன்முறையாக கண் வங்கி 1948ம் ஆண்டு தொடங்கப்பட்ட தும், அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றதும்  இந்த மருத்துவமனையில்தான் என்பது மேலும் சிறப்புக்குரியது.

பெருமைமிக்க இந்த மருத்துவமனையில் அருங்காட்சிகயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியகத்தில், 1819, 1910, 1920-ம் ஆண்டுகளில் அப்போதைய மருத்துவக் கண்காணிப்பாளர் களால் எழுதப்பட்ட  நோய்கள் குறித்த விவரங்கள், சிகிச்சை விவரங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1850 முதல் 1920-ம் ஆண்டு வரை பணியாற்றிய டாக்டர்கள் எழுதிய மருத்துவ குறிப்புகளும், மருத்துவ உபகரண கருவிகளும் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக 1926-ம் ஆண்டு கண் மருத்துவம் சம்பந்தமான படிப்பும், 1948-ம் ஆண்டு கண் வங்கியும் இந்த ஆஸ்பத்திரியில் தான் தொடங்கப்பட்டது.

கண் நோய்களுக்கு உயர்தர சிகிச்சை மையமாக எழும்பூர் கண் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கண் டாக்டர்கள், மயக்கவியல் டாக்டர்கள் மூலம் 24 மணி நேரமும் கண் விபத்து சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள். தினசரி 760 வெளிநோயாளிகளும், 261 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள்.

சராசரியாக தினந்தோறும் 43 பெரிய அறுவை சிகிச்சைகளும், 60 சிறிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்தில் 286 பேருக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சராசரியாக மாதம் 90 பேர் தங்களது கண்களை தானம் செய்வதாக பதிவு செய்கிறார்கள். இதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தினசரி 9 முதல் 12 கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

1985-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2.60 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 1981-ம் ஆண்டு முதல் இதுவரை 6 ஆயிரத்து 890 கண்கள் மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள் ளது. கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை கிடைத்துள்ளது.

எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி கட்டிடம் தொன்மை மாறாமல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் வெளித்தோற்றம் இப்போதும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

அறுவை சிகிச்சை அரங்குகள் மட்டும் நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளது. 200-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு உலகின் முதல் பழமையான கண் ஆஸ்பத்திரியான ‘மார்பீல்டு’ நிர்வாகம் சார்பில் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில்தான் முதன்முதலாக, 1972-ம் ஆண்டு தமிழக முதல்வராக கருணாநிதி  5 நாட்கள் தங்கி கண் நோய்க்கு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல  ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் போன்ற மூத்த அரசியல்வாதிகளும் இங்கு கண் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிறப்புமிக்க எழும்பூர் கண் மருத்துவமனையில் 200வது ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழக அரசால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்  நடைபெற்றது.

விழாவை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர்,  . இந்த மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.78 கோடி செலவில் 2,945 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  ரூ.5 கோடி மதிப்பில் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் அமைக்கப்படும் என்றும்,  திருவண்ணாமலை, சேலம், தருமபுரி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவுகள் நவீனப்படுத்தப்படும். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.64 கோடி மதிப்பில் கண் சிகிச்சைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து எழும்பூர் கண் மருத்துவமனையில்  200-வது ஆண்டு விழா கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் 200-ஆவது ஆண்டைக் குறிக்கும்  சின்னம் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ உள்பட ஏராளமான கண் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.