கெய்ரோ: வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய ஃபாரோ மன்னர் துடன்காமுன் சிலை கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளதாக எகிப்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த சிலை கடந்த 1970களில் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள எகிப்திய அரசாங்கம், இந்த ஏலம் சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது.

அந்தப் புகழ்பெற்ற பழுப்பு சிலையானது 4.7 மில்லியன் பவுண்டு தொகைக்கு ஏலம் விடப்பட்டது. அந்த சிலையானது ஆமுன் கடவுள் சிலையின் ஒரு பகுதியாக இருந்தது என்றும், ஏல செயல்பாடுகள் அனைத்தும் சட்டப்படியே நடைபெற்றது என்றும் கிறிஸ்டீஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிலையின் முக அம்சங்கள், இளம் ஃபாரோ மன்னரான துடன்காமுன் முகத்துடன் ஒத்திருப்பதாகவும் ஏல நிறுவனம் கூறியுள்ளது. அந்த சிலையை கடந்த 1960களில் ஜெர்மனி இளவரசர் வில்ஹெல்ம் வோன் தர்ன் வைத்திருந்தார் என்றும், பின்னர், ஒரு ஆஸ்திரிய நாட்டு முகவரின் கைகளுக்கு 1790களில் போய்ச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள எகிப்திய தூரதரகம், பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்தில் அளித்தப் புகாரில், “இந்த ஏல விஷயத்தில் சர்வதேச நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.