எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடர் – இந்திய நட்சத்திரங்கள் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

கெய்ரோ: எகிப்தில் நடைபெற்றுவரும் ஸ்குவாஷ் ஓபன் தொடரில், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஸ்குவாஷ் போட்டிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. கெய்ரோவில் தற்போது எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், தமிழ்நாட்டின் வீராங்கனையும், உலக ஸ்குவாஷ் தரவரிசையில் நம்பர் – 11 இடத்தில் உள்ளவருமான ஜோஷ்னா சின்னப்பா, நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதில், ஸ்காட்லாந்தின் லிசா அட்கெனை 7-11, 11-4, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவைப் பொறுத்தவரை, உலக ஸ்குவாஷ் தரவரிசையில் 13வது இடத்திலுள்ள இந்தியாவின் சவுரவ் கோசல், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் டாம் ரிச்சர்ட்ஸை 11-9, 11-4, 11-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றில் நுழைந்தார்.