இஐஏ2020 டிராப்ட்டுக்கு ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் கோரிய வழக்கு! மத்தியஅரசு பதில்அளிக்க உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை2020  குறித்து ஆட்சேபம் தெரிவிப்ப தற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட இஐஏ2020 டிராப் அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழில் வெளியிடக்கோரியும்,   மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும், தமிழில் வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும்,  மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும்,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்து.  அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாகவும் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கையும் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதையடுத்து, செப்டம்பர் 8-ம்தேதி இந்த இரு வழக்குகளும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

You may have missed