டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதா ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது அமளியில் ஈடுபட்ட  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்களை தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி,  வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின்  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17-ம் தேதி மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, விவசாய மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர்,மசோதாக்களை பாராளுமன்ற நிலை குழு மற்றும்  தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும்,  மசோதா குறித்து விவாதிக்கப்பட்டபோது,  எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரியன், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது மசோதா நகலை கிழித்து எரிந்தார். மேலும், பல்வேறு எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எரிந்தனர். மேலும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  அவை  தலைவரை முற்றுகையிட எம்.பிக்கள் முயற்சி செய்தபோது, அவை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது,  அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மசோதா மீது வாக்கு எதுவும் நடத்தப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் அவை கூடியது.

பின்னர் மீண்டும்  வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  இந்த விவாதத்தின் பொழுது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் அவையின் மைய பகுதிக்கு வந்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷிடம், அவைக்கான விதி புத்தகம் ஒன்றை எடுத்து காண்பித்து பேசினார்.  அவரை தொடர்ந்து அவையில் இருந்த மற்ற உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்தனர்.  அவர்கள் அனைவரையும் இருக்கைகளில் அமரும்படி துணை தலைவர் ஹரிவன்ஷ் கேட்டு கொண்டார்.  எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.   இதனை தொடர்ந்து மேலவை  ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்களை, இந்த கூட்டத்தொடர் முழுவதும், சஸ்பெண்டு ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, டெரிக் ஓபிரையன், சஞ்சய் சிங், ராஜீவ்சத்வ், கே.கே.ராகேஷ், சையத் நஷீர் உசைன், ரிபுன்போரா, டோலா சென், எலமாரம் கரீம் ஆகியோர், மீதமுள்ள கூட்டத்தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.