சென்னை:

தீயணைப்பு துறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்–1) மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீன நாட்டின் செங்டுவில் 8.8.2019 முதல் 18.8.2019 வரை நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டுகள் – 2019 போட்டியில் 77 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து பங்கேற்று 9 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்ற காவல்துறை ஆய்வாளர் பி. பிரான்சிஸ் மேரி, சிறப்பு உதவி ஆய்வாளர் வி. கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் கே. பாலு, முதல் நிலை காவலர்கள் டி. தமிழரசி, எம்.எஸ். கிருஷ்ண ரேகா மற்றும் அதிஸ்டம், காவலர்கள் பிரமிளா, உமா மகேஸ்வரி மற்றும் எம். தங்கவசந்த் ஆகிய 9 காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யை இன்று சந்தித்து, பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் து.மு. திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் செ.கி. காந்திராஜன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.கா. விஸ்வநாதன், ஆயுதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா.மஞ்சுநாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.