ஆசிய பாராலிம்பிக்கில் அசத்தும் இந்தியா: 4வது தங்கப்பதக்கத்தை பதிவு செய்தார் ஏக்தா பியன்

ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஏக்தா பியன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான கிளப் துரோ போட்டியில் பங்கேற்ற ஏக்தா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ekta

இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா நகரில் ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தம் 302 பேர் கலந்து கொள்கின்றனர்.

போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்திய வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டையை தொடங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஈட்டி எறிதல், நீச்சல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றது.

இந்நிலையில் மரத்திலான கிளப் துரோவில், பெண்களுக்கான எப்32/51 பிரிவில் இந்தியாவின் ஏக்தா பியன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் தனது நான்காவது வாய்ப்பில், 16.02 மீ. தூரத்திற்கு கிளப்பை வீசி அசத்தினார்.

இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரகத்தின் அல்காபி தெக்ரா 15.75 மீ. தொலைவிற்கு கிளப் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். ஏக்தா பெற்ற தங்கத்தை தொடர்ந்து இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மொத்தம் 4 தங்கம் கிடைத்துள்ளது.