2017ம் ஆண்டின் தென்மேற்கு பருவக்காலம் துவங்கப் போகின்றது. அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதன் யூகங்களும் வெளிவரத் துவங்கிவிட்டன.
பருவக்கால மழையின் தாக்கம் இந்தியாவில் அதிகம். ஏனெனில், மக்கள்தொகையில் 60% மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்கைமெட் வெதர் (skymet weather) அமைப்பு ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம்வரை இந்த ஆண்டு வழக்கத்தை (சராசரி 887 மில்லிமீட்டர்) விட இந்த ஆண்டு 5% குறைவாக மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

இதற்குக் காரணம் , வழக்கம்போல், எல்-நினோ தான். எல்-நினோ வின் தாக்கம் ஜூலை மாதம் முதல் உணர முடியும். ஸ்கைமேட் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளும், இதே கருத்தைத் தான் கூறியுள்ளன.

ஸ்கைமேட் தலைவர், ஜதின் சிங் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ” எல்-நினோ உருவாகும் தருவாயில் உள்ளதால், கடல் மட்டம் அதிகரித்து வருகின்றது. வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்வதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. வறட்சி ஏற்பட 15 சதவிகித வாய்ப்பு உள்ளது.” என்றார்.

இதுவரை, எல்-நினோ தாக்கம் இருக்கும்போது, வழக்கமான சராசரியைவிட அதிகமாக மழை பெய்தது கிடையாது. 1997 ஆண்டு மட்டும் தான் விதிவிலக்காக, வழக்கமான சராசரியைவிட அதிகமாக மழை பெய்தது.

எல்-நினோ எப்படி ஏற்படுகின்றது ?

பசிபிக் கடலில், குறிப்பாகப் பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம்.

“எல்–நினோ” என்பது, பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பசிபிக் கடலில், வெப்ப சலனத்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.

லா நினா..: எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண். இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம்வரை, சில நேரங்கள் சில வருடங்கள்வரை கூட நீடிக்கும்.

பசுபிக் கடலில் உருவாகும் இந்த எல்-நினோ” பருவ மாற்றம், இந்திய மகாசமுத்திரம், அரபிக்கடல், வங்க கடல் போன்ற பகுதிகளிலும் பருவ மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம், மழை பெய்ய வேண்டிய இடத்தில் மழை பெய்யாத நிலையும், தேவையற்ற இடத்தில் மிகவும் அதிகமான மழையும், சில இடத்தில், ஒரே நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்றும் கொட்டும்.
“எல்–நினோ” காரணமாக, பருவ காற்றுகள் திசை மாறும்., பருவ காற்றுகளின் பலம் குறையலாம்., அல்லது அதிகரிக்கலாம். கடலில் மீன்கள், ஓரிடத்தை விட்டு, வேறொரு இடத்துக்கு இடம் மாறிச்செல்லும்.இதனால் மீன்பிடி தொழிலும், மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்
எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது.

லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்குக் குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.