மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அறிக்கைகள் வெளியிட்டனர். அவை வழக்கமான புகழஞ்சலிகளாக மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், பாராளுமன்ற மேலவை உறுப்பினருமான இல.கணேசனின் அறிக்கை இரு விசயங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்த அறிக்கையில் “நாத்திகத்தைப் புறம்தள்ளிய எம்.ஜி.ஆர். என்றும் குறிப்பிட்டிருக்கிறார்”. மேலும், “கடவுள் மறுப்புக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்த  ஜெயலலிதா  என்று குறிப்பிடும் இல. கணேசன்  அயோத்தியில் நடந்த கரசேவாவை ஜெயலலிதா  ஆதரித்ததை நினைவுபடுத்தியிருக்கிறார்.

அதே போல, ஜெயலலிதா நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடரும் நிலையில், ஜெயலலிதாவின்  ஆட்சி முறை குறித்து இல.கணேசன்  எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது அறிக்கை:

பிரிவினை வாதம், கடவுள் மறுப்பு பேசிய இயக்கத்திலிருந்து தோன்றிய ஒரு கட்சி. அதிலிருந்து வெளி வந்து தேசியத்தில், ஆன்மிகத்தில் தனக்கிருந்த நம்பிக்கையால் பிரிவினை, கடவுள் மறுப்பு வாதத்தைப் புறந்தள்ளிய முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர்.

ஆனால் ஆன்மிகத்திலும், தேசிய ஒருமைப்பாட்டிலும் தனக்கிருந்த அபரிமிதமான ஈடுபாட்டால் பிரிவினை, கடவுள் மறுப்புக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்த விதத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா போற்றுதலுக்குரியவர்.

வாழ்பவர்களைப் பற்றி பல விமர்சனங்களை முன் வைக்கும் நாம், மறைந்தவர்களைப் பற்றிப் பேசும் போது குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொள்வது மரபு. அவ்விதத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களது ஆன்மிகத் தொண்டும், தேசியத்தில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே என் மனக் கண் முன் விரிகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி நாடெங்கும் ஹிந்து எழுச்சி அலை வீசிய சமயம். நரசிம்மராவ் தலைமையிலான அரசு 1992 நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தைக் கூட்டியது. கார் சேவா நடத்தலாமா, தடை விதிக்கலாமா என்பது குறித்தும் கலந்தாலோசித்தனர். பாஜக அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தாலும், அதில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கார் சேவா அனுமதிக்கப் பட வேண்டும் என வலியுறுத்திப் பேசியதை இந்தத் தேதியில் கூறாமல் வேறெந்தத் தேதியில் நினைவு கூர்வது…!?

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வரலாற்றில் நீங்காத இடமுண்டு. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்நாளில் பிரார்த்திப்போம்!” – இவ்வாறு தனது அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்திருக்கிறார்.