டெல்லி:

மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்தியநிதி அமைச்சர், நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று கூறியவர்,  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும்.

மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.  ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஐந்து கோடி பேருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

விவசாயிகள் முதற்கட்டமாக தலா 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் பெறுவர், சுமார் 8.7 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும்

வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்

உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற பெண்களுக்கு தலா 3 சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பம் பயனடையும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.