தேர்தல் 2016: மேற்கு மண்டலம், தி.மு.கவை கைவிட்டது ஏன்…?
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வின்னரான அ.தி.மு.க.வுக்கும், ரன்னரான தி.மு.கவுக்கும் இடையே மிகக் குறைந்த வாக்குவித்தியாசம்தான். தவிர வெற்றி பெற்ற இடங்களிலும் பெரிய வித்தியாசமில்லை. இதுவரை இத்தனை பலமான எதிர்க்கட்சி அமைந்ததில்லை.
அதே நேரம், “மேற்கு மாவட்டங்கள் கிட்டதட்ட முழுமையாக தி.மு.கவை கைவிட்டுவிட்டன. இல்லையெனறால் அக் கட்சிய ஆட்சியை பிடித்திருக்கும்” என்ற கருத்தும் நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்தை அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. திருப்பூரில் உள்ள 8 இடங்களில் அதி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே தி.மு.க. பிடித்திருக்கிறது. மீதமுள்ள 9 இடங்களில் அ.தி.மு.க. வென்றிருக்கிறது.
ஈரோட்டில் 8 இடங்களும் அ.தி.மு.கவுக்குத்தான்.
திருப்பூரில் 8 இடங்களில் 6ல் அ.தி.மு.கவுக்கு வெற்றி.
கோவையில் உள்ள 10 இடங்களில் அ.தி.மு.க. 9 இடங்களை வசமாக்கியிருக்கிறது.
உதகையில் மூன்று தொகுதிகளில் ஒன்றில் தி.மு.கவும் இன்னொன்றில் அ.தி.மு.கவும் வென்றிருக்கின்றன. (தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடம் பெற்றிருக்கிறது.)
ஆக ஒட்டுமொத்தமாகவே மேற்கு மாவட்ட மக்கள் தி.மு.க.வை விலக்கி வைத்து அ.தி.மு.க.வை அரவணைத்திருக்கிறார்கள்.
ஏன் இந்த நிலை?
இந்தத் தேர்தலில் என்று அல்ல.. காலம் காலமாகவே மேற்குமாவட்ட மக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள். இது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே நடக்கிறது.
ஆனாலும் வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள் அந்த பகுதியில்..
“மேற்கு மாவட்டத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. சமீபகாலமாக இந்த பகுதியில்தான் அதிகமாக சாதி ஆணவக்கொலைகள் நடந்தன. இந்த நிலையில் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் , கலப்புத்திருமணம் புரிவோருக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது. இது ஆதிக்க சாதியினருக்கு தி.மு.க. மீது ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது. ஆகவேதான் இந்த பகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை” என்கிறார்கள்.
மேலும் அவர்கள், “முன்பு சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் செல்வாக்கான தி.மு.க. பிரமுகராக இருந்தார். அவர் இருக்கும் போதே செல்வகணபதி செல்வாக்குடன் வலம்வந்தார். ஊழல் வழக்கில் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதும் அவரை கட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அதே போல ஈரோடில் என்.கே.கே. சாமி இருந்தார். கோவை பகுதியை எடுத்துக்கொண்டால் பொங்கலூர் பழனிச்சாமி. இவர்கள் கட்சியை எப்போதும் லைவ் ஆக வைத்திருந்தார்கள். இவர்களை தலைமை புறக்கணித்தது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பலருக்கு முக்கிய பொறுப்புகளை.. குறிப்பாக அமைச்சர் வாய்ப்பை அளித்தார். அவர்கள் தி.மு.க.வுக்கு எதிராக ஆக்டிவாக செயல்பட்டார்கள். இதுவும் தி.மு.கவின் தோல்விக்குக் காரணம்” என்றார்கள்.
இன்னொரு தரப்போ, “அது காரணம் இல்லை. கடந்த 2006 – 11 காலகட்டத்தில் நடந்த தி.மு.க. ஆட்சியின் போது, அக் கட்சி முக்கியஸ்தர்கள் ஆடிய ஆட்டம்தான் இந்தத் தோல்விக்குக் காரணம். அப்போது தி.மு.க. நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தொழிலதிபர்களிடம் பெரும் பணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு ஒரு விசயத்தைச் சொல்லலாம். அந்த காலகட்டத்தில் கோவையில் செம்மொழி மாநாட்டை தி.மு.க. அரசு நடத்தியது. அதற்காக பெரும் நிறுவனங்களிடம் கட்டாய வசூல் நடந்தது. அப்போது கோவை பகுதியில் செயல்பட்ட பிரிகால் நிறுவனத்திடமும் அப்போதைய அமைச்சர் ஒருவர் மூலம் நிதி கேட்கப்பட்டது. அந்த நிறுவனம் மறுத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு பலவித இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்நிறுவனத்தில் பெரும் குற்றச் சம்பவமும் நடந்தது.
இதையடுத்து அந்நிறுவனம், வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டது. அந் நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் அளித்துவந்த 5000 பேருக்கு தொழில் வாய்ப்பு பறிபோனது. அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்தனர்.
இதுபோல பல சம்பவங்கள். அதுதான் தி.மு.வை மக்கள் விலக்கிவைக்க காரணம்” என்றும் சொல்கிறார்கள்.
மேலும், “அந்த காலகட்டத்தில் நடந்த நில அபகரிப்பு வழக்குகளில் பல மேற்குமாவட்டத்தில்தான் பதியப்பட்டன என்பதில் இருந்தும் பல விசயங்களை புரிந்துகொள்ளலாம்” என்கிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் சேலம் அங்கம்மாள் காலனி விவகாரத்தில் அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயர் அடிபட்டதைச் சொல்கிறார்கள்.
“இதையெல்லாம் கவனித்தில் கொண்டு, எதிர்காலத்தில் தி.மு.க. செயல்பட்டால் மேற்கு மாவட்டத்திலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியும்” என்றும் சொல்கிறார்கள்.