மக்களவை தேர்தல் 2019 : 2.1 கோடி பெண்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை

டில்லி

ரும் மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் 2.1 கோடி பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். இது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய விவரமாகும். அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் வாக்காளர் பட்டியலையும் ஒப்பிடும் போது இதில் மிகப் பெரிய வேறுபாடுகள் கண்டறியப் பட்டுள்ளன.

கடந்த 2011 ஆம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்த கணக்கெடுப்பின் படி 2019 ஆம் வருடம் சுமார் 45.1 கோடி பெண்கள் 18 வயதை தாண்டியவர்களாக இருப்பார்கள். ஆனால் வாக்காளர் பட்டியலில் 43 கோடி பேர் மட்டுமே உள்ளனர். பட்டியலில் இடம் பெறாத 2.1 கோடி பெண்கள் எண்ணிக்கை என்பது கிட்டத்தட்ட இலங்கையின் மக்கள் தொகைக்கு சமமாகும்.

சராசரியாக கணக்கெடுத்தால் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 30 ஆயிரம் பெண்கள் பெயர் இடம் பெறாமல் உள்ளது. இதில் உத்திரப் பிரதேச மாவட்டத்தில் அதிக அளவில் பெண்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 68 லட்சம் பெண்களின் பெயர்கள் இடம் பெறாமல் உள்ளது. இங்கு சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 85000 பெண்களின் பெயர்கள் இடம் பெறாவில்லை.

இந்த வகையில் தென் இந்தியாவில் அதிகப் பெண்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் மிகவும் குறைந்த அளவிலான பெண்கள் எண்ணிக்கையே பதிவு செய்யப்படாமல் உள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த வித்தியாசத்தை கணக்கெடுக்கும் போது நாடெங்கும் 25 லட்சம் பெண்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெறாமல் இருந்துள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த வித்தியாசத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு தேர்தல் அலுவலர் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு குறைவாக உள்ளதால் இந்த வித்தியாசத்தினால் பாஜக நன்மை அடையும் என தெரிவித்துள்ளார்.