விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி, புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட உள்ளன. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.

கடைசி நாளான இன்று விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல நடிகர் கார்த்திக் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொள்ள, புதுவையின் காமராஜ் நகரில் இருசக்கர வாகன பேரணி மூலம் அம்மாநில முதல்வர் நாராயணசாமி வாக்குகளை சேகரித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேர்தல் பிரச்சாரங்கள், இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தன. பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தொகுதியை சார்ந்தவர்களை தவிர மற்ற அனைவரும் தொகுதியில் இருக்க அனுமதி இல்லை என்று தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி