சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாக, நடிகரும், கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையம் பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்கியது. இதில்,  மக்கள் நீதி மய்யத்துக்கு கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட,  பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை,  எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு, கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எங்களை விசுவரூபம் எடுக்க வைத்துவிடாதீர்கள் என்றும் மிரட்டியிருந்தார்.  மேலும், தேர்தல் ஆணையத்திலும், தங்களுக்கு டார்ச் லைட்டேதான் வேணும் என முறையிட்டிருந்தார்.

இதற்கிடையில், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதனை மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சிலர் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இதையடுத்து, தங்களதுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என விஸ்வநாதன் அறிவித்தார்.  இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், தற்போது, பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் வெளியிட்ட டிவிட்ட பதிவில், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  234 தொகுதிகளுக்கும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கமல் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பும் வீடியோ காட்சியையும் பகிர்ந்துள்ளார்.