பாமகவிற்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்…

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1989களில், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தை தொடங்கினார்.  பின்னாளில், அது  பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. தற்போது, பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்தக்கட்சி   ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது.  ஆனால், அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில், பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது.  அதே வேளையில், பகுஜன் சமாஜ்  கட்சி தேசிய அரசியல் கட்சி என்று அந்தஸ்தை  1997ல் பெற்றதால், அந்த கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதே வேளையில்,  ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

பின்னர், 1998இல் பாமகவுக்கு  மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது. அதுபோல, நடைபெற உள்ள தமிழக  சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

பாமக கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தில் பாமக போட்டியிடுகிறது.

அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்துள்ள பாமகவுக்கு,  அதிமுக கூட்டணியில்  23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் பாமக  மாம்பழம் சின்னத்தில்  போட்டியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.