டில்லி:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதி கசிவு குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. ஆனால் இதற்கு முன்னரே பாஜக ஐடி பிரிவு நிர்வாகியான அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்குப்பதிவு மே 12ம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மே 18ம் தேதி என்று பதிவிட்டார். டைம்ஸ் நவ் செய்தி சேனல் மூலம் இந்த தகவலை அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமித்து தேர்தல் ஆணையர் ராவத் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் குழு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.