மாநில அரசு முன்கூட்டியே கலைக்கப்பட்டால் தேர்தல் நன்னடத்தை விதிமுறை உடனடி அமல்….தேர்தல் ஆணையம் முடிவு

டில்லி:

சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதிமுறையை விரைவில் கொண்டு வர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வரும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதகள் அமலுக்கு வந்தவுடன் மாநில அல்லது மத்திய அரசு எவ்விதமான புதிய அறிவிப்புகளையும் வெளியிட முடியாது. அத்தியாவசிய உத்தரவுகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

இது தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் 2001ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் முன் கூட்டியே கலைக்கப்பட்டால், அப்போது அந்த அரசே தொடர்ந்து காபந்து அரசாக செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் தெலங்கானா மாநில சட்டமன்றம் முன்கூட்டிய கலைக்கப்பட்டவுடன், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை காபந்து அரசாக செயல்பட கவர்னர் நரசிம்மன் கேட்டுக் கொண்டார்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், சக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

சட்டமன்றம் கலைக்கப்பட்டவுடன் தேர்தல் ஆணையத்தில் இருந்து அம்மாநில தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்படும். அதன் பிறகு காபந்து அரசு வாக்காளர்களை கவரும் வகையில் எவ்வித கொள்ளை முடிவுகளையும் அறிவிக்க தடை விதிக்கப்படும். இதை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றம் சென்றால், இந்த விவகாரத்திற்கு தர்கரீதியான தீர்வு காண தேர்தல ஆணையம் முடிவு செய்துள்ளது.