முறைகேடுகள் எதிரொலி: திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

அகர்தலா:

திரிபுரா மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின்போது நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் உறுதி செய்யப்பட்டதால்,  168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 11ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது திரிபுரா மாநிலத்தில் மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் சராசரியாக 81 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஆனால், அங்கு வாக்குப்பதிவில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஏராளமான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் புகார்கள் குவிந்தன. பல இடங்களில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், முறைகேடுகள் நடந்தது உண்மை என தெரிய வந்தது. அதன்படி அந்த பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட  26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது.

இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அங்கு  வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BoothCapturing, election commission, LokSabhaElections2019, re-polling, Tripura West constituency, TripuraWest
-=-