20 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் : தேர்தல் ஆணையம் பரிந்துரை

டில்லி

தேர்தல் ஆணையம் டில்லி சட்டசபையில் உள்ள 20 ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது

டில்லி சட்டசபையில் தற்போது 67 உறுப்பினர்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செலுத்தி வருகிறது.   இதில் 21 உறுப்பினர்கள் பாராளுமன்ற செயலர்களாக பணி புரிவதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி  கடந்த 2016ஆம் வருடம் ஜூன் மாதம் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தது.

அதில் ரஜோரி கார்டன் தொகுதி உறுப்பினர் பஞ்சாப் தேர்தலில் நிற்பதற்காக தனது பதவியை 2017ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.   அதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.   மீதமுள்ள 20 பேர் குறித்தான மனு குறித்து விடை அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் சட வல்லுனர்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

ஆம் ஆத்மி கட்சி டில்லி சட்டசபையில் பாராளுமன்ற செயலர்கள் பதவியை ஊதியம் கிட்டும் பதவியாக கருதக் கூடாது என ஒரு சட்டத்தை உருவாக்கியது.   அதை அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.   அதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் வருடம் தகுதி நீக்கம் குறித்த வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது.   அந்த தீர்ப்பில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.    இதன் மூலம் தற்போது 67 பேருடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள்.

கார்ட்டூன் கேலரி