கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு நிழுவையில் உள்ள காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு, 1 வருட காலத்திற்குள் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டதோடு, மும்பையில் சென்று ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களிக்க கூடும் என்பதால், 15 எம்.எல்.ஏக்களையும் அப்போதைய கர்நாடக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அடுத்த பொதுத்தேர்தல் வரை அவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 15 எம்.எல்.ஏக்கள் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 21ம் தேதி 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “வழக்கு நிழுவையில் உள்ள காரணத்தால், தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.