Random image

தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பு : தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

டில்லி

தெலுங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டதால் அம்மாநில தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் ஆலோசனை நடத்த உள்ளது.

ஆந்திராவில் இருந்து பிரிந்த பிறகு தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.   கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார்.   அந்த சட்டப்பேரவையின் ஆயுள் காலம் நிறைவு பெற ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில்  சட்டப்பேரவையை உடனடியாக கலைத்து விட்டு தேர்தல் நடத்த ராவ் திட்டமிட்டார்.

அதன்படி நேற்று ஐதராபாத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவையைக் கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   அதன் பிறகு சந்திரசேகர் ராவ் ஆளுநரிடம் தீர்மான நகலை அளித்தார்.    அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர்,  தேர்தல் நடக்கும் வரை  பாதுகாப்பு அரசை நடத்த சந்திரசேகர் ராவை கேட்டுக் கொண்டார்.

ஆளுநர் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இது குறித்து தகவல் அளித்துள்ளார்.    இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெற உள்ளது.   அந்த தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில தேர்தலையும் இணைந்து நடத்துவது குறித்து இன்று மதியம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.