தேர்தல் கமிஷனருடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை! கோட்டையில் பரபரப்பு

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்தவண்ணம் உள்ளதால் டில்லி தேர்தல் கமிஷனர்,  தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபியுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதன் காரணமாக தலைமைச்செயலக வட்டாரம் பரபரப்பு அடைந்துள்ளது.

டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இன்றுபிற்பகல் 3 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அந்த ஆலோசனை கூட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொள்ளுமாறு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் அஜித்குமார் ஸ்ரீவத்சவா ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்தும், பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருக்கிறது.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தயாராவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து இதுபோல் புகார் குவியுமானால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைக்கும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.