கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி,  தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி  அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் பேச்சால், அசாம், தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது மார்ச் முதல்வாரத்தில், தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ஆம் தேதியும்,  புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ஆம் தேதியும்,  மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது.

எனவே,  இந்த மாநிலங்களுக்கும்  ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 5 மாநிலங்களுக்கும் சென்று மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை நடத்தியதுடன்,  தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இம்மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும், மே மாதம் சிபிஎஸ்இ மற்றும் மாநில அரசுகளின் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதார், மார்ச் கடையில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால், இன்று அசாம் மாநிலத்தில்   பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேமாஜியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  3000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து எரிசக்தி மற்றும் கல்வி உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,“ கடந்த தேர்தலின்போது, மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் மார்ச் 4 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த முறையும், அதே நாளில் தேதிகள் அறிவிக்கப்படும் என நான் நம்புகிறேன் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றவர்,  மார்ச் 7ந்தேதி அறிவிக்கப்படலாம் என தான் யூகிப்பதாகவும்,  தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நான் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குச் செல்வேன் என்று மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளது. தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையமே அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பிரதமர் மோடியே தேதிகளை கூறியிருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.