டில்லி:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி வெறும்  52 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளில், திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே படுதோல்வி அடைந்தன.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி குறித்து விவாதிக்க இன்று டில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜூன் 6 -ந்தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், அதில் எதிர்க்கட்சிகளின் பங்கு குறித்து, விவாதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலை வர்கள் பலர் பல்வேறு முக்கிய அலுவல் பணிகளில் பிசியாக இருப்பதால் இன்றைய ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.