காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவித்து உள்ளது.

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. இதன் காரணமாக கடந்த 12ந்தேதி தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தது.

இமாச்சலபிரதேசத்துக்கு தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத்துக்கு தேதிகள் அறிவிக்காமல் டிசம்பர் 18க்கு முன்னர் நடைபெறும் என்று கூறியது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி 22, 2018 அன்று முடிவடைகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், தேர்தல் நெருங்கி  வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து குஜராத் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில்  ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. 5-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், அங்கு நடைபெற்ற பட்டேல் இனத்தவரின் போராட்டம், பசு பாதுகாவலர்கள் பிரச்சினை போன்றவற்றால் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு குறைந்து, காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

இதற்கேற்றால்போல் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியில் குஜராத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்று பயத்தில்,  குஜராத் மாநில வாக்காளர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், சலுகைகளை  குஜராத் அரசு அறிவித்து உள்ளது.

25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்படும்

உள்ளாட்சிகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு தற்போது ரூ.16,500 நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிர்ணய சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பளம் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மருத்துவம் பெற ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்தில் இருந்து  ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 தடவை குஜராத் விஜயம் செய்துள்ளார். மேலும் வரும் 22ந்தேதி மீண்டும் குஜராத் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அப்போது மேலும் சலுகைகளை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசின் அதிரடி சலுகைகள், அறிவிப்புகள் மாநிலஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இதன் காரணமாக குஜராத்தில் பாரதியஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.