புதுடெல்லி: இந்த 2020ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 73 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளதாகவும், அவற்றுக்கு தேர்தல் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள 69 பேரின் பதவிகாலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. மேலும், தற்போது 4 உறுப்பினர்களுக்கான பதவிகள் காலியாக உள்ளன.

இந்த 69 உறுப்பினர்களில் 18 பேர் பாரதீய ஜனதாவையும், 17 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஆவர். தற்போதைய நிலையில், மாநிலங்களவையில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாவிற்கு 83 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளன. அந்தவகையில், பாரதீய ஜனதா அவையின் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

ஆனால், தற்போது பல மாநிலத் தேர்தல்களில் அந்தக் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, அக்கட்சியின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை. அதேசமயம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து ஆட்சிப் புரிவதாலும், ஜார்க்கண்ட், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணியுடன் ஆட்சியில் இருப்பதாலும், அக்கட்சியின் கை ஓங்கும் என்று தெரிகிறது.