டில்லி:

பிரதமரின் நரேந்திர மோடியின்  ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணைய்ம் இடைநீக்கம் செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற  தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவர் கடந்த செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அவர் சென்ற ஹெலிகாப்டர்  சம்பால்பூர் சென்று இறங்கியதும், தேர்தல் அதிகாரிகள் அவரது ஹெலிகாப்டரை சோதனை செய்தனர். இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து சோதனையிட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு விளக்கம் அளித்து  தேர்தல் ஆணையம்  வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோஹசின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படவில்லை. சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்புள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடமையை செய்த அதிகாரியை இடைநீக்கம் செய்து, பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.