தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி மற்றும் பிரசார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை! பரபரப்பு

தூத்துக்குடி:

4தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி 2வது கட்ட பிரசாரத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர் தங்கும் தூத்துக்குடி லாட்ஜில்  தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அவர் தங்கும் தனியார் விடுதி மற்றும்  திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்த இருந்த வாகனத்திலும் சோதனை நடைபெற்றது.. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில்  ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு 5முனை போட்டி நிலவி வருவதால் கடுமையான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தொகுதிகளை முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்ட மு.க.ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று ஓட்டப்பிடாரம் தொகுதியில் மேற்கொள்கிறார்.

தூத்துக்குடி வரும் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் அருகே கோரம்பள்ளம் பகுதியில் உள்ள  தனியார் விடுதியில் தங்குவது வழக்கம். இன்றும் அங்கு  தங்க திட்டமிட்டிருந்த நிலையில்,  அங்கு திடீரென வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விடுதியில் உள்ள அறை களில் சோதனை நடத்தினர். மேலும், ஸ்டாலின் பிரசாரம் செய்யும் வாகனத்திலும், கோரம்பள்ளம் பகுதியிலுள்ள விடுதியில், அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

You may have missed