டெல்லி: தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது என  தமிழகம் உள்பட 5மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், அஸ்ஸாம்,  புதுச்சேரி மாநிலங்களில் தற்போதைய சட்டமன்ற ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள  5 மாநிலங்களிலும்,  தேர்தல் பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்வது  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்  எழுதி உள்ளது.
அதில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது. முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.