சென்னை:

மிழகத்தில் 4 தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  வாக்கு பதிவுக்கான  ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும்,  நாளை (மே 19-ந் தேதி)  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக நேற்று மாலையுடன்  4 தொகுதிகளிலும் பிரசாரம் நிறைவுபெற்றது. அதையடுத்து,   தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

நாளை  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதற்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில், 4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

மேலும்,. பாதுகாப்பு பணியில் 1300 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 15,939 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 4 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மறுவாக்குப்பதிவு நடக்கும் 13 வாக்குச்சவடிகள் உள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளததாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் சத்தியபிரதா சாகு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இடைத் தேர்தல் நடக்கும் 4 மாவட்டங்கள், மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங் களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

வாக்கு பதிவன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான வாக்கு சாவடியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மற்றும் வாக்குபதிவிற்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது…