புதுடெல்லி: தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பாரதீய ஜனதா, தனது அரசியல் சாசன வாக்குறுதியை மீறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைஸி.

மக்களவை விவாதத்தின்போது அவர் கூறியுள்ளதாவது, “நான் இந்த காஷ்மீர் மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். நீங்கள் உங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆனால், அரசியல் சாசன உறுதிமொழியை மீறியுள்ளீர்கள்.
இந்த நிகழ்வை ஒரு தீபாவளிக் கொண்டாட்டம் என்கிறீர்கள்.

அப்படியெனில் அனைத்து காஷ்மீரிகளையும் விடுவிக்க வேண்டியதுதானே? அவர்களையும் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட அனுமதிக்கலாமே?

ஆனால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களின் மொபைல் ஃபோனைக்கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. எனவே, நீங்கள் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

திங்கட்கிழமை வருகின்ற ஈத் பண்டிகையை அம்மக்கள் கொண்டாட வேண்டாமா? அந்த திருநாளில் அவர்கள் ஆடுகளுக்குப் பதில் தங்களையே தியாகம் செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா? அப்படியெனில், கட்டாயம் அவர்கள் அதை செய்வார்கள். ஏனெனில், இதுவரை அவர்கள் அதை செய்துவந்துள்ளார்கள்” என்று பேசினார்.