என். சொக்கன்
 
0
 
சில கடலையுருண்டைப் பொட்டலங்களில் வெளியே ‘எண்ணம்:20’ என்று எழுதியிருப்பார்கள்.
அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குச் சிரிப்புதான் வரும். இருபது எண்ணங்களை இதற்குள் பொட்டலம் கட்டியிருக்கிறார்களோ என்று நினைத்துக்கொள்வேன்.
உண்மையில் ‘எண்ணம்’ என்பது ‘எண்ணிக்கை’ என்பதைக் குறிக்கும் சொல். ‘எண்ணம்:20’ என்றால் உள்ளே இருபது கடலையுருண்டைகள் இருப்பதாகப் பொருள்.
‘எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்’ என்பார்கள். அந்த ‘எண்’ணிலிருந்து வந்ததுதான் எண்ணிக்கை, எண்ணம், எண்ணல், எண்ணுதல் எல்லாமே.
தமிழில் ‘எழுத்தெண்ணிப் பாட்டெழுதுதல்’ என ஒரு விஷயம் உண்டு. அதாவது, ஒரு வரிக்கு இத்தனை எழுத்துகள் என்று எண்ணி எழுதுவது.
இதற்குப் பிரபலமான உதாரணம், காரைக்கால் அம்மையார் எழுதியது:
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்,
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்,
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
வெண்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் எண்ணிப்பாருங்கள், அதாவது, சிந்தித்துப்பார்க்கவேண்டாம், ஒன்று, இரண்டு என எண்ணிப்பாருங்கள், புள்ளிவைத்த எழுத்துகளை விட்டுவிடுங்கள், சரியாக ஒவ்வொரு வரியிலும் 16 எழுத்துகள்தான் இருக்கும். இந்த வகைப் பாடலைக் ‘கட்டளைக் கலித்துறை’ என்பார்கள்.
கட்டளையிடும் அரசுத்துறைக்குத் தலைவராகவேண்டுமென்றால், தேர்தலில் வெல்லவேண்டும், வாக்கு எண்ணிக்கையில் முதலிடம் பிடிக்கவேண்டும்.
தேர்தலில் மக்கள் வழங்கும் வாக்குகளைத் தொகுத்து எண்ணுகிற செயலை ‘வாக்கெண்ணுதல்’ என்பார்கள். ’11 மணிக்குமேல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரியவரும்’ என்பார்கள்.
அதாவது, ஒவ்வொரு கட்சி, வேட்பாளரின் தகுதிகளை மக்கள் எண்ணிக் கை வைப்பார்கள் இயந்திரத்தின்மீது, பின்னர், வாக்கு எண்ணிக்கையின்போது அவர்கள் எண்ணம் வெளிப்படும்!
(தொடரும்)