தேர்தல் தமிழ்: நிறைவுப்பகுதி

என். சொக்கன்

download

 

ட்சிக்கு வரும் எந்தவோர் அரசும் மக்களுடைய நலனைதான் மனத்தில்கொண்டு இயங்கும். தங்களுக்கு வாக்களித்த மக்கள்மட்டுமல்ல, தங்கள் ஆட்சியின்கீழுள்ள எல்லா மக்களையும் அரவணைத்துச்செல்லவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

நலன் என்ற சொல், நலம் என்ற சொல்லின் போலி. இதற்கு இன்னும் சில உதாரணங்கள்: நிலம் என்பதை நினன் என்பார்கள், மனம் என்பதை மனன் என்பார்கள். ‘ம்’க்குப்பதிலாக ‘ன்’ போலியாக வரும்.

‘போலி’ என்றால், போலிருப்பது என்று பொருள், ஒன்றைப்போலிருப்பது அதன் போலி.

இந்தச் சொல்லை இன்று நாம் இழிவுப்பொருளிலேயே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ‘போலி மருத்துவர்’ என்றால், மருத்துவரைப்போல நடிப்பவர், ‘போலி மருந்து’ என்றால் பொய்யான மருந்து.

உண்மையில் ‘போலி’ என்பது இழிவான சொல்லே அல்ல, அதைப் பயன்படுத்தும் பின்னணியைப்பொறுத்துதான் பெருமையும் இழிவும் அமைகிறது.

உதாரணமாக, ஒரு பெண்ணைப்பார்த்து, ‘மயில்போலி’ என்று சொல்லலாம், மயில்போல் ஒயிலானவள் என்று அதற்குப்பொருள்.

போலி என்ற சொல், போல்+இ என உருவாகியுள்ளது, போலிருப்பது என்ற பொருளில். இதேபோல் வேறு சொற்களையும் காணலாம். உதாரணமாக, Elevatorஐச் சில கட்டடங்களில் ‘மின்உயர்த்தி’ என்று எழுதியிருப்பார்கள், மின்சாரத்தின் துணைகொண்டு மக்களை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு உயரச்செய்வது அது.

இன்னொரு சொல், கண்ணி. இதற்குப் ‘பொறி’ என்ற பொருள் இருப்பது எல்லாருக்கும் தெரியும், ‘கண்ணிவெச்சுப் பிடிச்சான்’ என்கிறோம், ‘கண்ணிவெடி அபாயம்’ என்கிறோம்.

ஆனால், கண்ணிக்கு ‘கண்ணைக்கொண்டவள்’ என்ற பொருளும் உண்டு. மான்கண்ணி என்றால் மான்போன்ற கண்கொண்டவள், அங்கயற்கண்ணி என்றால் அழகிய, மீன்போன்ற கண்கொண்டவள்!

நலன் என்ற சொல் நலம் என்பதன் போலியாக இருக்கலாம். அரசாங்கம் மக்களிடம் போலியாக நடந்துகொண்டுவிடாமல் உண்மையாக இருக்கும்வரை யாவும் நலமே!

(நிறைவடைந்தது)

 

கார்ட்டூன் கேலரி