தேர்தல் தமிழ்: துறை

--

என். சொக்கன்

ab

அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சில துறைகள் வழங்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, வேளாண்மைத்துறைக்கு ஓர் அமைச்சர், உள்துறைக்கு ஒருவர், காவல்துறைக்கு இன்னொருவர்.

சில நேரங்களில் முக்கியத்துவம்வாய்ந்த ஒரே துறைக்கு இரண்டு அமைச்சர்கள் இருப்பதும் உண்டு. அவர்களில் ஒருவர் முதன்மையாகவும் இன்னொருவர் இணை அமைச்சர் அல்லது துணை அமைச்சராகவும் செயல்படுவார்.

இங்கே ‘துறை’ என்ற சொல் உட்பிரிவு என்ற பொருளில் பயன்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை என்கிற பெயர்களைக் காண்கிறோம். ஆங்கிலத்தில் இதனை Department  என்பார்கள்.

ஆக, காவல்துறை அமைச்சர் என்றால், அவர் மாநிலத்தைக் காக்கும் பணியை ஆற்றுகிற துறையை வழிநடத்துகிறார்.

‘துறை’க்குத் தமிழில் வேறு பொருள்களும் உண்டு. உதாரணமாக, ‘துறை’முகம் என்கிறோம், அது நீர்த்துறை (நீர்நிலையின் கரையிலே நிற்பதற்கான அமைப்பு) என்ற சொல்லைக்கொண்டு பிறந்தது.

சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை என்று விளக்குவார்கள். அங்கே ‘துறை’ என்பதன் பொருள், இடம், இந்தப் பாடல் எப்படிப்பட்ட சூழ்நிலையிலே பாடப்படுகிறது என்பதை விளக்குவது.

‘துறை’ என்ற பெயரில் பல பாடல்வகைகளும் உண்டு. உதாரணமாக, ஆசிரியத்துறை, வஞ்சித்துறை.

இதில் வஞ்சித்துறை பார்க்க மிக அழகாக இருக்கும், நான்கே அடிகள், அடிக்கு இரண்டே சொற்கள் எனக் கச்சிதமான பாடல். எடுத்துக்காட்டாக நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம்:

உள்ளம், உரை,செயல்

உள்ள இம்மூன்றையும்

உள்ளிக் கெடுத்துஇறை

உள்ளில் ஒடுங்கே.

மனம், பேச்சு, செயல் என்ற மூன்றையும் சிந்தித்துப்பார், அவை மற்ற பொருள்களில் பதியாதபடி பார்த்துக்கொள், இறைவன்தான் எல்லாம் என்று அவனுக்குள் ஒடுங்கிவிடு!

(தொடரும்)