c
ஒரு கட்சியின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை ஏற்று நடத்துதலை ‘ஆட்சி’ என்கிறோம். அதையே ஒரு கூட்டணி செய்தால், ‘கூட்டணி ஆட்சி’ என்கிறோம்.
ஆட்சி என்பது புதுச்சொல் அல்ல, அன்றைய சேர,சோழ,பாண்டியர் அரசாங்கத்தைக்கூட, ஆட்சி என்றுதான் குறிப்பிடுகிறோம். அது மன்னராட்சி, இது மக்களாட்சி!
‘ஆள்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததுதான் ஆட்சி, ‘காண்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து காட்சி வருவதுபோல.
‘சி’ என்ற விகுதியைக்கொண்டு தமிழில் பல சொற்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகப் பிரபலமானது, புரட்சி.
புரள்+சி என்பதுதான் புரட்சி என்றாகிறது. எதையேனும் புரட்டிப்போடுவது புரட்சி.
இந்தப் ‘புரட்சி’யை அடிப்படையாகக்கொண்டு, அதற்குப் பல அடைமொழிகளைச் சேர்த்துள்ளார்கள். பசுமைப்புரட்சி என்பது, விவசாயத்துறையில் நிகழ்ந்த மாற்றங்களைச்சொல்கிறது, வெண்மைப்புரட்சி என்பது, பால்வளத்துறையில் நிகழ்ந்த மாற்றங்களைச்சொல்கிறது, தகவல்தொழில்நுட்பப்புரட்சி என்பது கணினிசார்ந்த தொழில்நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டைச் சொல்கிறது.
வளர்ச்சி என்பதும் இவ்வகைச்சொல்தான். வளர்தலைக் குறிப்பது. உயர்வு, தாழ்வு என்ற சொற்களை உயர்ச்சி, தாழ்ச்சி என்பார்கள்.
இந்தச் ‘சி’ விகுதிச்சொற்கள் அனைத்தும் பெயர்ச்சொற்கள், இவற்றுக்குள் வினைச்சொற்கள் இருக்கின்றன, மாறாக, இந்தப் பெயர்ச்சொற்களை அப்படியே வினைச்சொற்களாகப் பயன்படுத்தலாகாது.
உதாரணமாக, சிலர் ‘முயற்சித்தான்’ என்று எழுதுவார்கள். காரணம், ‘முயற்சி’ என்பதே வினைச்சொல் என்று அவர்கள் எண்ணிவிடுகிறார்கள்.
உண்மையில், ‘முயல்’ என்பதுதான் வினைச்சொல், முயன்றான் என்றே எழுதவேண்டும். ‘ஆட்சினான்’, ‘ஆட்சித்தான்’, ‘புரட்சித்தான்’ என்றெல்லாம் நாம் எழுதுவதில்லையே, ‘முயற்சித்தான்’ என்றுமட்டும் ஏன் எழுதுகிறோம்?
ஒருவேளை முயற்சி என்ற சொல்லையே வினைச்சொல்லாகப் பயன்படுத்த விரும்பினால், ‘முயற்சிசெய்தான்’ என்று எழுதலாம். ‘அந்தக் கட்சி ஆட்சிசெய்தது’ என்பதுபோல.
ஆனால், ‘ஆட்சிசெய்தது’ என்பதைவிட, ‘ஆண்டது’/’ஆள்கிறது’ என்பதுதான் சிறப்பான பயன்பாடு!
(தொடரும்)