தேர்தல் தமிழ்: ஊழல்

என். சொக்கன்

 

Bitter_gourd_(করলা_)

 

தேர்தலில் போட்டியிடுகிறவர்கள்மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் எவையும் இருக்கக்கூடாது என நாம் எண்ணுகிறோம். அப்பழுக்கற்ற நற்பெயர் கொண்டவர்களுக்கே வாக்களிக்க விரும்புகிறோம்.

‘ஊழல்’ என்ற சொல், ஊழ்+அல் என்று பிரியும்.

ஊழ் என்றால், விதி என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ‘ஊழின் பெருவலி யாவுள?’ என்பார் வள்ளுவர். ஊழ்போல் வலிமையானது வேறென்ன உண்டு?

‘விதி’ என்பதைத் தலைவிதி என்ற பெரிய பொருளில்மட்டும் எண்ணவேண்டியதில்லை. அதைவிடச் சிறிய, ஆனால் நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் நிறைய உண்டு.

உதாரணமாக, சாலையில் செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஓர் அலுவலகத்தில் பணியாற்றும்போது அவர்கள் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்…

இப்படிப் பின்பற்றவேண்டிய ஒழுங்கு ‘ஊழ்’ எனப்படுகிறது, அது இல்லாதபோது, ஊழ்+அல் சேர்த்து ஊழல் என்கிறோம்.

ஆக, ஊழல் என்றால், ஊழின்மை, ஒழுங்கின்மை, விதிமுறைகள் மீறப்படுதல்.

‘ஊழல்’ என்பதற்குக் கெடுதல், தளர்ச்சி என்ற பொருள்களும் உண்டு. அவையும் கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்தைதான் தெரிவிக்கின்றன. அதாவது, நன்னிலையிலிருந்து கெடுதல், தளர்தல்.

‘அல்’ என்பதை இந்தப் பொருளில் பயன்படுத்தும் இன்னோர் அழகிய சொல்லும் தமிழில் உண்டு: பாகற்காய்.

இந்தச் சொல் பாகு+அல்+காய் என்று பிரியும். பாகு(இனிப்பு) இல்லாத, கசப்பான காய் என்பதால் அதற்குப் பாகற்காய் என்று பெயர்!

‘அல்’க்கு இரவு என்ற பொருளும் உண்டு. அதாவது, ஒளி அல்லாத நிலை, ‘அல்லும் பகலும் பாடுபட்டோம்’ என்று சொல்கிறோமல்லவா? அதன்பொருள், ஒளி உள்ள பகலிலும், ஒளியில்லாத இரவிலும், அதாவது நாள்முழுக்கப் பாடுபட்டோம்!

‘அல்லி’ என்ற பெயர்கூட, இரவில் (அல்லில்) மலர்வதால்தான் வந்தது என்கிறார் தேவநேயப்பாவாணர்!

(தொடரும்)

 

கார்ட்டூன் கேலரி