டில்லி:

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக இன்று மாலை  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வரும் சூழலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக வாக்கு எண்ணிக்கை யின்போது ஏதோ முறைகேடு  செய்ய முயற்சி செய்ய வசதியாக, எக்சிட் போலை தனக்கு சாதகமாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாஜகவுக்கு மாறாக மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இதற்காக கடந்த சில நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ள நாயுடு,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி , கம்யூனிஸ்டு தலைவர்கள், சரத்பவார் உள்பட பலரை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில்,  இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேச உள்ளார். இவர்களின் சந்திப்பு இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் பாஜக அல்லாத மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக பணியாற்றி வருகிறார். தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் எதிர்க்கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே கடிதம் கொடுத்துவிடவேண்டும் என்பதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.