சென்னை: ஐஐடி சென்னை மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, கடல் அலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விசையாழியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இக்குழுவினரின் மிக சமீபத்திய ஆய்வானது, உலகப் புகழ்பெற்ற சஞ்சிகை(journal) ஒன்றில் வெளிவந்துள்ளது.

இந்த 21ம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, அன்றாட மனித வாழ்விற்கே ஆற்றல் என்பது அத்தியாவசியம். இன்றைய நிலையில், சுற்றுப்புற சீர்கேட்டை கருத்தில்கொண்டு மறுசுழற்சி முறையிலான ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

ஐஐடி சென்னையின் கடல்சார் பொறியியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் அப்துஸ் சமது இந்த ஆய்வுப் பணியில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இவர், கடல் அலையிலிருந்து ஆற்றலை பிரித்தெடுப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்.

மறுசுழற்சி ஆற்றல் தொடர்பான இலக்கை அடைந்து, இந்திய அரசின் சுற்றுச்சூழல் பராமரிப்பு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதே இவருடைய குழுவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.