திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு வாக்களிக்க தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

சட்டசபை தேர்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட 405 வாக்குச் சாவடிகளில் தேர்தலன்று வாக்களிக்கத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் 3 லாரிகளில் கொண்டு வரப்பட்டது.

பின்னர் கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு அந்த அறைக்கு அனைத்து  கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை சுழற்சி முறையில் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.