யானைகள் பெயருக்கு ஐந்து கோடி சொத்து…

யானைகள் பெயருக்கு ஐந்து கோடி சொத்து…

“இந்த யானைகளில் ஒன்று என் உயிரையே காப்பாத்தியிருக்கு. இந்த ரெண்டு யானையும் தான் என் குடும்பம்.  அதே நேரம் வேட்டைக்காரர்கள் மற்றும் தந்தம் கடத்துறவங்களால என் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருக்கு.  அதனால எனக்கப்புறம் இந்த யானைகள் இப்போ மாதிரியே இருக்கணும்னு தான் நான் இந்த முடிவை எடுத்தேன்” என்கிறார் சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மோதி மற்றும் ராணி என்னும் இரண்டு யானைகளின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ள பாட்னாவை அடுத்த புல்வாரியை சேர்ந்த அக்தர் இம்ரான்,

12 வயதிலிருந்தே இந்த யானைகளுடனேயே வாழ்ந்து வரும் இம்ரான் இதற்காகத் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  யானைகளின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்விற்கென ஏராவத் (AERAWAT) என்னும் அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார் கடந்த 15 வருடங்களாக.

“எனக்குப்பிறகு இந்த சொத்துக்கள் “எராவத்” பொறுப்பில் சென்று விடும்.  இந்த யானைகளின் காலத்திற்குப் பிறகு முழுசொத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்.  வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது” என்று விளக்குகிறார் இந்த 50 வயது யானை காப்பாளர்.

வேட்டைக்காரர்களிடமிருந்து யானைகளை மீட்கும் பொருட்டும், யானைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பொருட்டும் இவர் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.  இதனாலேயே இவரது குடும்பத்தை விட்டும் பிரிய நேரிட்டதாம்.

– லெட்சுமி பிரியா