குவஹாத்தி: அஸ்ஸாம் காட்டுப் பகுதி வழித்தடத்தில், இரண்டு யானைகளின் மீது மோதி பலியாக காரணமாக இருந்த ரயில் என்ஜினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் லம்டிங் காப்புக் காட்டுக்கு நடுவே ரயில் பாதை செல்கிறது. இவ்வழியே கடந்த செப்டம்பர் 27ம் தேதி கடந்துசென்ற ஒரு சரக்கு ரயில், பாதையைக் கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகளின் மீது மோதியது.
இதில், குட்டி யானை 1 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, அந்த ரயிலின் என்ஜின்(12440 WDG4) குவஹாத்தியின் பாமுனிமெய்தான ரயில்வே யார்டில் வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, முதன்மை வனவிலங்கு வார்டன் எம்கே யாதவா கூறுகையில், “இது தற்போது ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருப்பதால், என்னால் விரிவாக எதையும் கூற முடியாது. அதேசமயம், ரயில்வே துறை தனது பாதைகளை சீரமைக்க வேண்டுமென்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்” என்றார்.