கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்..

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை

எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம்  குளறுபடிகள் கொண்டது. .

சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்ற ஒரு குறிப்பிட்ட கால அளவு மதம், நாடுகள் ஆகியவற்றை நிர்ணயித்து, பாரபட்சம் காட்டுவது இன்னும் தவறு.

எந்த நாட்டிலிருந்தும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சட்டவிரோத குடியேறிகளில் அப்பாவிகளும் இருப்பார்கள், சதிகாரர்களும் இருப்பார்கள். அப்பாவிகளுக்கு மனிதாபிமானத்தைக் காட்டலாம், சதிகாரர்களுக்கு சட்டத்தின் கடுமையைக் காட்டி உடனே அகற்றலாம்.

அண்மையில் வந்தவனுக்குக்கூட அவனுக்குப் பார் போற்றும் பெருமை இருந்தால் குடியுரிமை கொடுக்கலாம். பல ஆண்டுகள் குடியிருந்தாலும் அவன் தீயவன் என்றால் இரக்கமே காட்டாமல் வெளியேற்றலாம். இந்த தேசத்திற்கு அந்த உரிமை உண்டு..

எவன் நல்லவன் கெட்டவன் எனக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு எல்லோரையும் ஒரே மூட்டையில் போட்டுக் கட்டுவது தவறு..

 

குடியுரிமை திருத்தச் சட்டமே இவ்வளவு குளறுபடியாக இருக்கிறது என்பது பக்கம்.. பாஜக இதை வைத்து அடுத்து அடுத்து என்ன செய்யும் என்று விவரித்து அச்சமூட்டுபவர்கள், இன்னொரு பக்கம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், நாடு முழுக்க இஸ்லாமியர்கள் மேல் பாய்ந்து சல்லடை போடும் என்பது அச்சத்தின் உச்சமோ உச்சம்..

ஏற்கனவே அசாமில் பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் உள்பட எனப் பல லட்சம் பேர் குடியுரிமைக்குத் தகுதி பெறாதவர்கள் எனத் தரம் பிரிக்கப்பட்டு அகதிகள் என்ற முத்திரையோடு வைக்கப்பட்டுள்ளனர் இவர்களைத் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் தரம் பிரித்ததை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் தரம் பிரித்த விதம்தான் பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. நாட்டுக்கே பணியாற்றிப் போரிட்ட ராணுவ வீரர்கூட ஆவணங்களை காட்டாததால் அகதி பட்டியலில் போயிருக்கிறார் என்ற தகவல்களையெல்லாம் எவ்வளவு உறுத்தல்களாக இருக்கின்றன.

இதுதொடர்பான பல்வேறு கோணக் கட்டுரைகள்  பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வியாபித்து கிடக்கின்றன. அதை வைத்துக் கிளம்பும் பலத்த எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி ஆரம்பித்த 2014 முதலிலேயே, நாட்டுக்குப் புதிது புதிதாகச் செய்யப்போகிறோம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். பாஜக அரசு சில அஸ்திரங்களையும் எடுத்து விடுகிறது. ஆனால் வில்லில் இருந்த புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அஸ்திரமே சுக்கு நூறாகச் சிதறிவிடுகிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு என்றார்கள். அச்சடித்த நோட்டுக்கள் அத்தனையும் மொத்தமாக திரும்பியதில் செல்லாத நோட்டுக்களை ரிசர்வ் பேங்க் மாதக்கணக்கில் எண்ணியதுதான் மிச்சம். பல லட்சம் சிறு குறு தொழில்கள் , சிறு வியாபாரிகள் அழிந்தது இன்னும் மிச்சமோ மிச்சம்.

நாடு முழுக்க ஒரே சீரான வரி என ஜிஎஸ்டி என்றார்கள், 38 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. எப்படி ஜிஎஸ்டி ரிட்டன் ஃபார்ம்களை பூர்த்திசெய்வது என்று, வியாபாரிகள் மட்டுமல்ல ஆடிட்டர்களே மண்டை காய்கின்றனர் என்ற புலம்பல்களுக்குப் பஞ்சமே இல்லை. மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி வசூல் பங்கு நிலுவையைக் கேட்டு நீதிமன்றங்களுக்கே செல்கின்றன. மத்திய அரசு கையை பிசைந்துகொண்டிருக்கிறது.

எல்லையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஒழிக்க, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை அகற்றினார்கள், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கினார்கள். ஆனால் அதிரடி நடந்து 150வது நாளை தொடப்போகிறது. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அங்குள்ளவர்கள் சொல்ல நாம் கேட்க முடிவதில்லை. காஷ்மீரில் நிலத்தை வாங்கப்போவதாகத் துள்ளிக் குதித்தவர்களையும் காணமுடியவில்லை. அங்கு துண்டிக்கப்பட்ட இன்டெர்நெட் இன்றுவரை இணைப்பில்லை.

சிறந்த முயற்சியினால் கடும் பாடுபட்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சொற்ப விலைக்குத் தனியாருக்குத் தாரையாக்கும் வேலைகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம் பொருளாதாரம் என்னவாயிற்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் மடைமாற்ற பாஜக அரசு அடுத்தடுத்து புது புது சரக்குகளைச் சந்தையில் இறக்கிவிட்டுப் பரபரப்பை கிளப்புகிறது..

ஆனால் சில பிரச்சினைகளில் இஸ்லாமிய சமூகம் வசமாக சிக்கிக்கொள்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

தீவிர இந்துத்துவா என்ற நீரை அனைத்து இந்துக்களின் மீதும் தெளித்து, இந்து தேசம் என ஒரே முகத்தை இந்த நாட்டுக்குப் பொருத்த பாஜக பார்க்கிறது. இதுதான் அவர்களின் பாதை.

அவர்களை எதிர்கொள்ளவேண்டிய இடத்தில், இஸ்லாம் சமூகத்தை காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் பாஜகவின் இந்துத்துவா ஆயுதத்தை எதிர்க்கும்போது, பெரும்பாலும் முஸ்லீம் என்ற மதத்தைத்தான் பிரதானமாக முன் நிறுத்துகிறார்கள்.

எங்கள் அப்பன் பாட்டனெல்லாம் இந்த நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தியாகிகள். உங்களைப்போலவே நாங்களும்.இந்தியன் தாண்டா என்று மார்தட்டாமல் இஸ்லாம் என்ற மத அடையாளத்தை மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.

டெல்லி ஜாமியா பல்கலை சம்பவத்தில் போலீசாரை நோக்கி ஒரு விரல் காட்டி பெரும்புகழ் பெற்றுவிட்ட உயர்கல்வி மாணவி, பர்கா தத்திடம் பேட்டிளிக்கிறார்.என்னவென்று? இந்த அரசாங்கம் போலீஸ் தாக்குதல் எதைப்பற்றியும் எங்களுக்குப் பயமில்லை என்று.. சட்டத்தின் மாட்சிமைதான் எங்களுக்கு மதிப்பு வாய்ந்தது என்று அவர் சொல்லியிருக்கவேண்டும்.. சிவில் உரிமையை ஆணித்தரமாய் பேசவேண்டிய ஒரு பல்கலைக்கழக மாணவியான அவரே அல்லாதான் பெரியவர்..அவருக்கு மட்டுமே கட்டுப்படுவோம் என்று நீட்டி முழக்குகிறார். மத நம்பிக்கையைத்தான் பொதுவெளியில் அவ்வளவு தீவிரமா வைக்கிறார்.

இதுபோன்ற தருணங்கள்தான் தீவிர இந்தத்துவாவைக் கையில் வைத்து திரிபவர்களுக்கு வசமாகக் கிடைத்துவிடுகின்றன.. உங்களுக்கு உயர்ந்தவர் அல்லா என்றால் எங்களுக்கு உயர்ந்தவர் ராமர்தான் அவரைத் தவிர வேறுயாருக்கும் பயப்படமாட்டோம் என்று சொல்கிறார்கள்.

இந்த நாட்டின் அனைத்து வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு தங்களுக்கு மதம்தான் உயர்ந்து என்று இஸ்லாமியர்கள் எப்படி காட்டுகிறார்கள் பாருங்கள்.. நீங்களும் இருக்கிறீர்களே என்று இந்துக்களைப் பார்த்து கேட்டுச் சீண்டுகிறார்கள்.

இது, மேல் தளத்தில் தீவிர இந்துத்துவாவிற்கும் தீவிர மதப்பற்றாளராக இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடக்கும் காலம் காலமான யுத்தம். மதவெறி ஊறிப்போனவர்களின் ஜென்ம விரோத மோதல்..

ஆனால் இவர்களின், சண்டை, வெறுமனே மத நம்பிக்கை மட்டுமே கொண்ட நம்மை சுற்றியிருக்கும் கோடான கோடி சாமானிய, சாந்தமான இந்து- முஸ்லீம்களின் தலைகளை போட்டு உருட்டப்பார்க்கிறது..

இந்த விவகாரத்தில் இன்னும் கொழுந்துவிட்டு எரிய அருமையாக செயல்படுவார்கள் இந்த போலி மதச்சார்பின்மை வாதிகள்.

ஒருவரின் மத நம்பிக்கையைக் கேலி பேசினால்கூட பொறுத்துக்கொள்ளலாம். அப்படி கேலி பேசிக்கொண்டே, இன்னொருவரின் மத நம்பிக்கையை தூக்கிப்பிடிப்பார்கள் இந்த போலி மதச்சார்பின்மை காவலர்கள்..அதுதான் பிரச்சினையே. பல சந்தர்ப்பங்களில், மத நம்பிக்கை கொண்ட பெரும்பான்மையினரை எரிச்சலூட்டுவதே இவர்களின் வேலை. காரணம், வேறொன்றுமில்லை வாக்கு அரசியல்…

இப்படிப்பட்ட சூழலில்தான் பிரச்சினைகளை தனித்தனியாகப் பிரித்து அலசி ஆராயாமல் ஒட்டுமொத்தாக போட்டுக் குழப்பியதில், நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களால் வன்முறைகளும் அரங்கேற்றப்படுகின்றன.

அசாமில் சட்டவிரோத குடியேறிகளான அண்டை நாட்டினரை ஏற்றுக்கொள்ளமுடியாது, அவர்களால் தங்களுக்கு பெரும் பாதிப்பு என்று அம்மாநில மக்கள் போராடிவருகின்றனர்.

அகதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதுமே தெளிவான நிதானமான அணுகுமுறை தேவை.. எடுத்த எடுப்பில் விரட்டியடித்தால் மனிதாபமே இல்லையா என்று உலகின் கோபத்திற்கு ஆளாவோம். அகதிகளை மனிதாபிமானம் காட்டி வரவேற்க ஆரம்பித்தாலோ, எங்கெங்கோ இருந்து வர ஆரம்பித்து அகதிகள் படையெடுப்பு பெரிய அளவில் போகும்…உள் நாட்டு மக்களுக்கு, வேலைவாய்ப்பு, வர்த்தகம், தொழில், இனக்கலப்பு எனப் பிரச்சினைகள் புதிது புதிதாக முளைக்கும்.

மழைக்கு வீட்டின் முன் ஒதுங்குபவருக்கு நீண்டநேரம் ஆனால் கொஞ்சம் குடிக்க டீயோ காபியோ கொடுக்கலாம். மழைவிட்டதும் அவரை கிளப்பிவிட வேண்டும். தவிர்க்கவே முடியாத ஒரு நெருக்கடியால் ஓரிரு குடும்பங்கள் நம்வீட்டில் இரவு பொழுதிற்குத் தஞ்சம் அடைந்தால், அன்றிரவோடு அந்த எபிசோடுக்கு எண்ட் கார்டு போட்டு விடிந்ததும் அனுப்பிவிடவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு வேறு வழிகாட்டல்களை சொல்லலாம். அவ்வளவுதான். தொடர்ந்து தங்க இடம் கொடுத்தால் கடைசியில் வீட்டுக்காரனுக்குத்தான் பிரச்சினை.

அசாமில் சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினை என்பது இப்படித்தான் மத்தியில் நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியின் தொடர் அலட்சியத்தால் உருவானது. சட்டவிரோத குடியேறிகளால் இனியும் தாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அந்த மண்ணின் மக்கள் போராடுகிறார்கள்.

இப்போதுகூட நாம் தமிழ்நாட்டில் குறைந்த கூலிக்காகவும் ஆட்கள் பற்றாக்குறைக்காகவும் வேலைக்காக விரும்பி அழைக்கும் வட மாநிலத்தவர்கள் என்று சொல்லப்படும் அத்தனை பேரும் இந்தியர்களா? அவர்களில் அசாம்,மேற்கு வங்கம் வழியாக சட்டவிரோதமாய் குடியேறி இங்கே வந்து ஐக்கியமாகியிருப்பவர்கள் எத்தனை பேரோ? யாருக்குத் தெரியும்…

சட்டவிரோத குடியேறிகளை தரம் பிரித்து நாட்டை விட்டு அனுப்பிவைக்க வேண்டியதுதான் காலத்தின் அவசியம், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் நாட்டின் எதிர்கால நலனுக்கு அவசியமோ அவசியம்.

ஆனால் புதிய சட்டத்தில் இன்னென்ன மதங்கள் என்றால் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் இந்தந்த நாடுகளைச் சேர்ந்த இந்தந்த மதத்தினருக்கு மட்டும் ஒரேயடியாக எதுவுமே கிடையாது என்றும் பாரபட்சமான அளவுகோல்களை கொண்டுவந்ததுதான் தவறு..

தற்போதைய கொந்தளிப்பை அடக்க பாஜக அரசு இதனைச் சரிசெய்யவேண்டும். ஆனால் செய்யுமா அல்லது விட்டுவிட்டு அடுத்து நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் என்று போய், வழக்கமான மடைமாற்றலில் இறங்குமா என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

வரலாற்றின் தவறுகளைச் சரிசெய்யத் துடிக்கும் பாஜக அரசுக்கு அடியோடு சேதமாக்காமல், இந்த காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில்  எப்படி படிப்படியாகச் செய்வது என்றுதான் தெரியவில்லை