பாலியல் விவகாரம், கடைசிவரை இடியாப்ப சிக்கல்தான்?

பாலியல் விவகாரம், கடைசிவரை இடியாப்ப சிக்கல்தான்?

சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

அண்மைக்காலமாக நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை பார்த்தால், நீதிபதிகளின் கருத்துக்களை கேட்டால், அதிலும் பாலியல் விவகாரங்கள் தொடர்பான வழக்கு என்றால், ஏதோ மசாலா சினிமா பார்ப்பது மாதிரியான உணர்வுதான் மிஞ்சுகிறது..

இன்னொருத்தர் மனைவியுடன் உறவுகொள்ளும் ஆணுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை என்ற நிலை இருந்தது. தெரிந்தே தவறு செய்யும் பெண்ணுக்கு மட்டும் அப்போது தண்டனை இல்லையே என அந்த சட்டப்பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.

தவறு செய்யும் இருவருக்கும் தண்டனை என தீர்ப்பு வரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் பெண்ணுக்கு தண்டனை இல்லாதது மாதிரியே இனி ஆணுக்கும் தண்டனை கிடையாது என்று தீர்ப்பு வந்தது.. தவறு செய்த பெண்ணுடன் வாழவிருப்பம் இல்லாவிட்டால் அவள் கணவர் விவாகரத்துக்கு போகலாம் என்றும் வழிகாட்டி பலகை ஒன்றும் அடிக்கப்பட்டது.

ஆணும் பெண்ணும் சமம்.. அதனால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவிங் டூ கெதர் முறையிலும் வாழலாம் என்றும் இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்னது..

ஆணும் பெண்ணும் சமம், இருவரும் திருமணம் செய்து வைத்துக்கொள்ளாமலேயே உறவு வைத்துக்கொள்ளலாம் என்றால், ஒரு அறையில் தனியாக இருக்கும் ஆணையும் பெண்ணையும் விபச்சார வழக்கில் எதன் அடிப்படையில் கைது செய்கிறார்கள் என்றே புரியவில்லை என்ற கேள்வி காலம்காலமாய் சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறது.

பணத்தின் அடிப்படையில் உடல் உறவு நடக்கிறது என்பதை சட்டத்தின் பாதுகாவலர்கள் கண்கூடாக பார்த்தார்களா? அப்படி பார்த்து பிடித்தால், அந்தரங்கத்தை பார்ப்பது தனி உரிமை மீறல் அல்லவா? என பல கேள்விகள் எழுந்தும் அதற்கும் தெளிவான பதில் இல்லை.

இப்போது நீதித்துறையிடமிருந்து மேலும் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் அடடே ரக கருத்து…

போக்சோ சட்டத்தில் 18 வயதுக்குட்பட்டவர் சிறுமி என்று வரையறைக்கப்பட்டுள்ளதை 16 வயதாக குறைக்க பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் அவள் சம்மதத்துடன் ஆண் உறவு கொண்டாலும், அது போக்சோ சட்டப்படி குற்றமாகும், ஏழு முதல் பத்தாண்டுகள்வரை ஆணுக்கு சிறைதண்டனை கிடைக்கும்..

இப்படித்தான் நாமக்கல் மாவட்ட இளைஞர் ஒருவருக்கு, மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் பத்தாண்டு சிறைதண்டனை விதித்தது. அதை எதிர்த்து இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிதான், தற்போது இளைஞர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை என்று இளைஞரை விடுதலை செய்துவிட்டு, தனது கருத்தை மேலும் இப்படி பதிவு செய்கிறார்.

அதாவது 17 வயதில் உள்ள பெண், பள்ளி இறுதி ஆண்டிலோ கல்லூரி முதல் ஆண்டிலோ படித்துக்கொண்டிருப்பார். அந்த வயதில் ஒருவரின் சம்மதத்துடன் நடைபெறும் உறவு இயற்கைக்கு எதிரானது அல்ல. அப்பாவித்தனத்தாலும் அவை நடைபெறலாம். அப்படி நடைபெறும் உறவுக்காக ஆண் தண்டிக்கப்படுகிறார் என்பதால்தான் போக்சோ சட்டத்தில் சிறுமி என்பதை வரையறுக்கும் வயதை 16 ஆக குறைக்கவேண்டும் என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.

அவர் கருத்துப்படி பார்த்தால், 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பெண் சுயமாய் விருப்பம் தெரிவித்து ஆணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. அப்படி வைத்துக்கொண்டால் உறவில் ஈடுபடும் ஆணை தண்டிக்கக்கூடாது என்று அர்த்தம் ஆகிறது.

ஆனால், இது இன்னொரு கோணத்தில் சிக்கலை உண்டாக்கிவிடுகிறது. 16 வயதுக்குற்பட்ட பெண்ணுக்கு விரும்பு உறவில் ஈடுபட சுதந்திரம் கிடைக்கும்..ஆனால் அதே பெண் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடியாது. காரணம், 18 வயது பூரித்தியானால்தான் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளமுடியும். இந்த சட்டப்பிரிவை காரணம் காட்டி, 18 வயதுக்குற்பட்ட பெண்ணின் திருமணத்தை எத்தனையோ மண்டபங்களில் புகுந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாகசம் செய்து நிறுத்துவதை நிறைய பார்த்திருப்பீர்கள்.

அதாவது உறவு வைத்துக்கொள்ளமுடியும், ஆனால் திருமணம் செய்துகொள்ளமுடியாது. இப்படியொரு நிலை அமைந்தால் பெண்ணுக்கு ஏற்படும் விசித்திரமான சூழல் இது
இந்த இடத்தில் இரண்டே வழிதான் உண்டு. ஒன்று, போக்சோ சட்டத்தை திருத்தக்கூடாது..அப்படி திருத்தினால் பெண்ணின் திருமண வயதையும் 16 ஆக குறைக்கவேண்டும். அப்படி குறைக்காவிட்டால் என்ன நடக்கும்?

16 வயது பெண் விருப்பப்பட்டு உறவு கொண்டு, அதன் மூலம் கர்ப்பம் ஆனால் குழந்தைகூட பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள 18 வயதுவரை காத்திருக்கவேண்டும். போக்சோவில் திருத்தம் கொண்டுவரப்பட்டால் ஆணை தண்டிக்க முடியாது என்பதால் சம்மந்தப்பட்டவன்
திருமணத்திற்கு சம்மதிக்கிறானா என்பது இன்னொரு இடியாப்ப சிக்கல் சமாச்சாரம்.. மனக்கண்ணால் நினைத்து பாருங்கள் அந்த நிலைமையை..
நீதிபதி சொன்ன மாதிரி கல்லூரி முதலாண்டு படிக்கிற ஒரு பெண்ணை சிறுமி என்ற பதத்தால் குறிப்பிடும் போது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது.

இப்படித்தான் டெல்லி கூட்டு பலாத்கார நிர்பயா வழக்கில், அனைவரையும் விட மிகவும் கொடூரமாக செயல்பட்டு பெண்ணின் பிறப்புறுப்பில் கம்பியை சொருகினான் ஒரு கொடூரன். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத அளவுக்கு பெண்ணுக்கு ஆபத்தான நிலைமையை உருவாக்கிய அந்த கிராதகனின் வயது 17.. ஆனாலும் 18 வயது பூர்த்தியாகாததால் சட்டம் அவனை சிறுவன் என்று சொல்லிவிட்டது. மரண தண்டனையிலிருந்து அவன் தப்பிக்க ஒரேயொரு வயது குறைவாக இருந்ததுதான் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.. அதன் பிறகே, சிறுவன், சிறார் குற்றவாளிக்கு வயது வரையறை விஷயத்தில் மத்திய அரசில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார்கள்.

பாலியல் பலாத்காரம், பாலியல் உறவு தொடர்பான அனைத்து சட்டங்களும் கால மாற்றத்திற்கு ஏற்ப மேம்படுத்தாதவரை இதுபோன்ற குழப்பமான நிகழ்வுகள் நடந்துகொண்டேதானிருக்கும்.

பாலியல் என்றாலே ஒவ்வொரு சட்டங்களும் ஒவ்வொரு விதமாகத்தான் சொல்கின்றன.
பாலியல் பலாத்காரம், அத்துமீறல் போன்றவற்றை அட்சர சுத்தமாக எல்லைகளை வைப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல..

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவனால் மட்டுமல்ல. பதினைந்து வயது சிறுவனால் பரஸ்பர சம்மதத்துடன் உறவுகொண்டு ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியும், பலாத்காரமும் செய்யமுடியும்.

ஆனால் அதே பதினைந்து வயசு சிறுவனுக்கு, பலாத்காரத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கமுடியாது.

இதேபோல வயதுக்கு வந்துவிட்டபிறகு ஒரு பெண்ணால், பெரிய வயது பெண்களைப்போலவே பரிபூரணமாக ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளமுடியும். ஆனாலும் 18 வயது பூர்த்தியாகாததால் அந்த பெண்ணை, சிறுமி என்றே சட்டம் சொல்கிறது.

நடைமுறையில் ஆச்சர்யம் என்னவென்றால், இருபது வயதானாலும் உலகம் தெரியாத ஆண்களும் இருக்கிறார்கள், பத்து வயது முதலே பிஞ்சிலே பழுத்தவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதுதான்.

பெண்கள் விஷயத்திலும் இப்படித்தான். சட்டம், சிறுமி என்று சொல்கிற வயதில், அதாவது 13 முதல் 18- க்குற்பட்ட வயதில்தான் பெரும்பாலான கதாநாயகிகள் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். 14, 15 வயதில் அவர்கள் அங்கங்களை குலுக்கி, முக்கல் முனகலோடு வெளிப்படுத்தும் காம ரசங்களை, அவர்களைவிட வயதில் மூத்தவர்களாய் உள்ள பெண்களால்கூட வெளிப்படுத்தமுடியுமா என்பது சந்தேகமே..

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி அறிமுகமாகும்போது அவருக்கு வயது வெறும் 13தான்.. அவர்தான் ஆய் உய் என உடலை முறுக்கி கண்ணை தொறக்கணும் சாமி என்று கிறங்கடித்தார்

இப்படிப்பட்ட கதாநாயகிகளை, யாராவது சிறுமி என்ற கண்ணோட்டத்தில் பார்த்ததுண்டா?

18 வயதுக்குற்பட்ட ஒரு பெண், காமரசம் சொட்டும் விரசமான காட்சிகளில் நடிக்க முடியும்- ஆனால் என்ன விந்தையென்றால், அவர் நடித்த படத்திற்கு சென்சார் போர்டு, அடல்ட்ஸ் ஒன்லி என ஏ சான்றிதழ் அளித்தால், அந்த நடிகையே அங்கே சிறுமியாகிப்போகிறார். அவர் நடித்த அந்த படத்தை தியேட்டரில் பார்க்க அவருக்கே சட்டப்படி அனுமதி கிடையாது. சென்சார் சர்ட்டிபிகேட் விவகாரத்தில் அடல்ட் என்றால், உடல் ரீதியாக வயதுக்கு வந்துவிட்டாலும் 18 வயது ஆகாவிட்டால் அவர் அடல்ட் அல்ல..

இத்தகைய நெருடலான விஷயங்களுக்கு தீர்வுகாண இன்னமும் பழைய முறைகளின் அடிப்படையிலேயே போய்க்கொண்டிருந்தால் முழுமையான சட்டத்தின் தண்டனையை வழங்குவதில் திணறல்தான் ஏற்படும்.

பாலியல் விவகாரங்களில் இனியும் வயதை மட்டுமே கணக்கில் எடுத்து அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்காமல், சம்மந்தப்பட்டவரின் மனதையும் அது பெற்றிருக்கும் புத்திசார்ந்த வீரியத்தையும் உடல் சார்ந்த வலிமையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றை கண்டறிய அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமான புதிய முறைகளை கையாளவேண்டும். இதுதான் முழுத்தீர்வுக்கு வழிவகுக்கும் என்று சொல்லவில்லை..ஆனால் நல்ல மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

ஒரேவரியில் சொன்னால், மண்டையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாறிமாறி ஆட்டாமல், தீர்க்கமாய் ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கய்யா….

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Elumalai Venkatesan, Sex complaints, Special Feature
-=-