அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் வழக்கறிஞர் அனுப் சவுத்ரி வழக்கில் இருந்து விலகல்!

டில்லி:

டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்மீது, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ.10 கோடி கேட்டு  அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பாக வாதாடிய வந்த மூத்த வழக்கறிஞரான அனுப் சவுத்ரி, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கெஜ்ரிவால் மீதான வழக்கில் அவருக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு, டில்லி உயர்நீதி மன்றத்தில், நீதிபதி ராஜீவ் சாஹை என்லா முன்பு நடை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12 ம் தேதி நடைபெற்ற விசாரணை யின்போது, வழக்கில் தனக்கு போதுமான தகவல்கள் கிடைக்காமல்  தர்ம  சங்கடமான சூழ்நிலையை  ஏற்படுத்தியதாக வழக்கறிஞர் கூறியிருந்தார். மேலும், இதுபோன்ற அணுகுமுறையில் தனக்கு விருப்பமில்லை என்றும் அதன் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

டில்லி கிரிக்கெட் வாரியத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, டில்லி முதல்வர் அரவிந்த்  அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அருண் ஜெட்லி, ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தொடக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜர் ஆகி வாதாடினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது, ஆஜரான அருண்ஜெட்லிக்கும், ராம்ஜெத் மலானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது ராம்ஜெத்மலானி, அருண்ஜெட்லியை குரூப் என்ற வார்த்தை கூறி அநாகரிகமாக விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த நீதிபதி,  மூத்த வழக்கறிஞராக உள்ள ராம் ஜெத்மலானி, இவ்வளவு மோசமான வார்த்தையை பயன்படுத்தியது, மிகவும் இழிவான செயல்; இதை அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி, அவர் பயன்படுத்தி இருந்தால், கெஜ்ரிவால் இந்த கோர்ட்டில் ஆஜராகி, அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால், ராம்ஜெத் மலானியின்  அந்த வார்த்தையை தான்  ஏற்றுக்கொள்ள வில்லை என்று கூறினார்.

இதையடுத்து, ராம்ஜெத் மலானிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த ராம்ஜெத் மலானி, அரவிந்த் கெஜ்ரிவாலை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது மூத்த வழக்கறிஞர் அனுப் சவுத்ரியும் விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.