சட்டப்படியே உள்ளாட்சி தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம்! ஜெயக்குமார் சல்ஜாப்பு

சென்னை:

ட்டப்படியே உள்ளாட்சி தேர்தல் தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை  கடந்த 2ஆண்டுகளாக நடத்தாமல் அதிமுக அரசு, இழுத்தடித்து வரும் நிலையில் உச்சநீதி மன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேர்தல் நடத்துவற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலால் பயம் கொண்டுள்ள அதிமுக தலைமை, தேர்தல் குறித்து நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தியது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்தாமல் கவுன்சிலர்களைக் கொண்டே தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், துணைமுதல்வர் ஓபிஎஸ் போன்றவர்கள், அப்படியே ஏதும் இல்லையே, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை ஏதும் நடத்தப்பட வில்லையே என்று வீராப்பாக  மறுப்பு தெரிவித்தனர்.

ஆனால், நேற்று இரவு,  மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுடன்  தமிழக அரசு பிறப்பித்து இருக்கிறது. இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, தமிழக மக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை என்று வக்கலாத்து வாங்கியதுடன்,  மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே. சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது  தேர்தல் வியூகம் அல்ல என்று கூறியவர்,  எம்.எல்.ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர், எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக் கின்றனர். அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் விளக்கம் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சியில் இருப்பதாக இருமாப்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தற்போது சட்டத்தை காட்டி தப்பித்துக்கொள்வதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.