ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை:

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட ஜெயலலிதாவின் வீட்டை அரசு செலவில் நினைவிடமாக மாற்ற தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை – போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மக்களிடம் இதுபற்றி கேட்டறிந்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இது தொடர்பான கோப்புக்களை கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.