ஹராரே:

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் நங்கக்வா பதவியேற்றார். அதையடுத்து அந்நாட்டில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. தலைநகர் ஹராரேவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், விருந்தினர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்டனர். டெமாக்ராடிக் சேஞ்ச் கட்சி தலைவர் மோர்கன் ஸ்வாங்கிராய், மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான ஜாய்ஸ் முஜுரு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

ஜிம்பாப்வே, பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது விடுதலைக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களில் ஒருவர் முகாபே. 1980-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் அதிபராகப் பதவியேற்ற முகாபே 37 ஆண்டுகளாக பதவியில் இருந்து வந்தார்.

சமீப காலமாக இவர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எமர்சன் நங்கக்வா அடுத்த அதிபராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில், தனது மனைவி கிரேஸுக்கு அந்தப் பொறுப்பு வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு வசதியாக, நங்கக்வாவை பதவி நீக்கம் செய்தது உள்பட முகாபே மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலும், ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, அவரை சிறைபிடித்த ராணுவம், வீட்டுக்காவலில் வைத்தது. மேலும், அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று ஆளும் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய யூனியன் கட்சி நிர்பந்தித்து வந்தது. அதற்கு முகாபே மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகுதி நீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்திருந்தது. இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் முகாபே, தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.